Sunday, 17 November 2013

நல்லெண்ணெய்யும் 
கல்செக்கும்.

            ஆரம்ப காலங்களில் சமையலுக்கும் விளக்கெரிக்கவும் நெய் தான் பயன் படுத்தப்பட்டு வந்தது. பின்னால் தான் தாவர வித்துக்களில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. தொடக்கக்காலத்தில் எள்ளிலிருந்து தான் எண்ணெய் பிழிய கண்டுபிடிக்கப்பட்டது. எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எள் நெய் எண்ணெய் ஆனது. பிறகு தான் தேங்காய் நெத்து, ஆமணக்கு விதை கடலை வித்து போன்றவற்றிலிருந்தும் எடுக்கப்பட்டது. அவற்றையும் தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய்,  கடலை எண்ணெய் என்றுதான் குறிப்பிட்டனர். எள் நெய் ஆகிய எண்ணெய் ந்ல்லெண்ணெய் என்று அதாவது முதல் எண்ணெய் என்று சிறப்பாக அழைக்கப்பட்டது. இவ்வாறு எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்க செக்கு என்கிற ஒரு கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை பெரும்பாலும் கிராமங்களில் எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும்.
மாடுகளை பயன்படுத்தி செக்கு இயக்கப்பட்டது. இந்த செக்கு மர உலக்கை வாகை மரத்தில் உருவாக்கப்படுகிறது.  ஆயினும் தற்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் பாவனையில் உள்ளன.

மனிதன் உயிர் வாழ்தலுக்கும் உடல்நலதிற்கும் புரதம், கொழுப்பு மாவு சத்து போன்ற சத்துகள் மிகவும் அவசியம். அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள்  போன்ற உண்ணும் உணவின் மூலம் இச் சத்துகள் உடலுக்குக் கிடைக்கின்றன. உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்பதற்கு, உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. நம் உணவு முறையில் இந்தக் கொழுப்பு சத்து பெரும்பாலும் தாவர எண்ணெய்யிலிருந்தே கிடைக்கிறது. நமது சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் நல்லெண்ணெய்  அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை  கொண்டது. இது எள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எள்ளுடன் கருப்பட்டி சேர்த்து கல் மற்றும் மரத்திலான செக்குகளில் ஆட்டி எண்ணெய் பிழிவது தான் நமது மரபில் இருந்து வந்த முறை. எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிது சிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும். இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்லெண்ணெய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே. இப்படி மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்பதே வழக்கம்.
அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரம் பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இந்த பித்தளை பாத்திரத்தின் உட்புறத்தில் ஈயம் பூசப்பட்டிருக்கும். இதை வைத்து தான் செக்கிலிருந்து வரும் எண்ணெயை எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி சேமிப்பார்கள். மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து ஆட்டப்பட்ட எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணையை, பித்தளையில் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தின் மூலம் செக்கிலிருந்து எடுத்து ஊற்றி சில்வர் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நல்லெண்ணெய்க்கு சில அபாரமான குணங்கள் இருப்பதை நடைமுறையில் நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
ஆனால் இன்றோ பெரிய பெரிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுக்கிறார்கள். இவ்வாறு செய்யும் போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நல்லெண்ணெயில் மறைந்திருக்கும் சில அதிசயமான குணம்சங்கள் குறைந்து போய்விடுன்றன. ஆனால் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இன்றைய சூழலில் செக்கு எண்ணெய் என்பதே அபூர்வமான ஒன்றாக மாறிவிட்ட்து.




Sunday, 27 October 2013


 ஓய்ந்து கொண்டிருக்கும்
உளியின் சத்தம்
படைத்தலுக்கு என ஒரு தெய்வத்தை படைத்திருக்கிறது மனிதனின் இறைநம்பிக்கை. ஆனால் படைத்தல் என்பதை பல லட்சம் ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறான் மனிதன். இழைத்து, வார்த்து, வளைத்து உடைத்து, தட்டி, சுட்டு என பல்வேறு வழிகளில் தனக்குத் தேவையான பொருட்களை படைத்துக் கொண்டிருக்கிறான் மனிதன். கல்லை கல்லால் செதுக்கி கல் ஆயுதம் கண்டான். இரும்பை கண்டடைந்த பின் கல்லை உளியால் செதுக்கி  கலை ஆக்கினான். இவனது உளியின் ஓசையில் உயிர் பெற்ற சிலைகள் ஆயிரம் ஆயிரம். 

அவை தமிழரின் கலை செழுமைக்கு காலம் காலமாக மௌன சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன. 

தந்தையின் உளி சத்தத்தை பின் தொடர்ந்து சிலை வடித்த மகனின் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறது கழுகுமலை வெட்டுவான் கோயில். 


இப்படி உயிர் சிற்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்த உளியின் சத்தம் இன்று அடங்கி போனது காலத்தின் கோலம் தான். எந்திரங்களின் செயல்பாட்டு வளர்ச்சி அது செயல்படும் தளத்தை விரித்திருக்கிறது. அதன் விளைவு சிலை வடிவப்பதில் உளியினை ஒரங்கட்டிவிட்டு அந்த இடத்தை எந்திரங்கள் ஆக்கிரமித்து கொண்டன. உடலுழைப்பை எந்திரங்கள் எளிமையாக்கியிருந்தாலும் உளியின் நேர்த்தியும் கைவண்ணமும் காணாமல் போயிருப்பது என்னவோ நிஜமே. எந்திரத்தனம் எப்போதும் சலிப்பை உண்டாக்கும் தானே.

Friday, 25 October 2013





 ரசமட்டம்

 ஒரு பரப்பின் சமதளத்தை கண்டுபிடிக்க பயன்டும் கருவியே ரசமட்டம் ஆகும். தச்சாசாரி, கொத்தனார், தளக்கல் பாவுபவர் போன்றவர்களால் நமது மரபில் இக்கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. எட்டு அங்குல நீளமும், ¾ அங்குல அகலமும், ½ அங்குல உயரமும் கொண்ட ஒரு செதுக்கப்பட்ட மரத்துண்டில் குடைந்த பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு அங்குல் நீளம் கொண்ட கண்ணாடி குழல் ஒன்று பதிக்கப்பட்டு அந்தக் கண்ணாடி குழல் கண்ணுக்கு தெரியும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட மெல்லிய பித்தளை தகட்டை பிரி ஆணி கொண்டு முறுக்கி மூடப்பட்டிருக்கும். அந்தக் கண்ணாடி குழலுக்குள் பாசி பிடிக்காமல் இருக்கும் விதத்தில் சுத்தப்படுத்தி பதப்படுத்தப்பட்ட தண்ணிர் குமிழ் ஒன்று குழலுக்குள் அங்குமிங்கும் ஓடும் விதத்தில் அடைக்கப்பட்டிருக்கும். ரசமட்டத்தில் மையம் குறிக்கப்பட்டிருக்கும். இந்த மையபுள்ளியில் கண்ணாடி குழலுக்குள் இருக்கும் நீர்குமிழ் பொருந்தும் நிலையைக் கொண்டு பரப்பின் சமதளத்தை கணக்கிடுவர். இந்த ரசமட்டம் தான் நமது மரபுவழியில் இருந்து வந்த சமதளத்தைக் கணக்கிடும் கருவியாகும். இன்றைய நாளில் சாராயம் (alcohol) அடைக்கப்பட்ட அலுமனியத்தினாலான நவீன கருவியை பயன்படுத்துகின்றனர். இதனை ஆங்கிலத்தில் spirit level என்பர். ரசமட்டத்தில் கிடைத்தத் துல்லியம் இந்த நவீன கருவியில் கிடைப்பத்தில்லை என்பது அனுபவம் வாய்ந்த ஆசாரிகள் மற்றும் கொத்தனார்களின் கருத்தாக இருக்கிறது.




Friday, 18 October 2013






வாழைப்பூ விளக்கு




இருளை விரட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட சாதனமே விளக்கு. இருளில் உள்ள பொருள்களை தனது ஒளிவிடும் சுடரினால் விளங்கும்படி செய்வதனால் அது விளக்கு என்று ஆயிற்று. அகல் விளக்கு, தொங்கு விளக்கு,
காமட்சி விளக்கு, குத்து விளக்கு என வகைகள் பல இருப்பினும் தமிழ் மரபில் குத்து விளக்குக்குத் தனி இடமுண்டு. இவ்விளக்கு சமய சடங்குகள், வாழ்க்கைவட்ட சடங்குகள் மற்றும் பொது விழாக்களில் இடம் பெறுவது சம்பிரதாயம். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் குத்து விளக்கு ஏற்றப்பட்டு தொடங்குவது என்பது மரபு. பொதுவாக குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகம் பித்தளையே ஆகும். வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்களிலும் இவ்விளக்குகள் உருவாக்கப்படுவது உண்டு. எவர்சில்வர் என்கிற ஸ்டென்லெஸ் ஸ்டீல் பயன்பாட்டிற்கு வந்த பின் அதிலும் விளக்குகள் தயாரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிறிய விளக்குகளே இதனால் செய்யப்படுகின்றன. இத்தகைய விளக்குகள் விலை குறைவாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகாது. மேலும் இந்த உலோகத்தில் இரும்பு கலப்பு இருப்பதால் பொதுவாக மரபுவழியில் அது ஏற்கப்படுவதில்லை.
குத்துவிளக்குகள் வாழைப்பூ விளக்கு, காய் விளக்கு, கம்பி விளக்கு, லட்சுமி விளக்கு, தூண்டாமணி விளக்கு என பலவகைளில் தயாரிக்கப்படுகின்றன. நாச்சியார்கோயில், கும்பகோணம் சுவாமிமலை, வாகைக்குளம் போன்ற ஊர்களில் தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் பிரசித்திப் பெற்றவையாகும். வாழைப்பூ விளக்கு தயாரிப்பில் நாகர்கோயில் கோட்டாறு பெயர் பெற்றதாகும். பொதுவாக வாழைப்பூ விளக்கு என்பது மலையாள மரபு என்கிற கருத்து உண்டு. இருந்தாலும் நெல்லை, குமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் வாழைப்பூ விளக்கு பயன்படுத்தும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. இந்த விளக்குகள் கோட்டாறு பகுதியில் தயாரிக்கப்படுகின்றன. மலையாள மரபில் பயன்படுத்தப்படுகிற வாழைப்பூ விளக்கிற்கும் இதற்கும் வடிவில் வேறுபாடு உண்டு. வாழைப்பூ போன்ற தலைப் பகுதி தண்டுடன் பொருந்தும் இடத்தைச் சுற்றிய பகுதி குழிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதுவே இவ்விளக்கின் எண்ணெய் தாங்கியாகும். மலையாள மரபு வகை விளக்கில் இந்த எண்ணெய் தாங்கியில் திரி போடுவதற்கு என்று மூக்கு என்கிற தனி பகுதி கிடையாது. எண்ணெய் தாங்கியின் எந்த பகுதியிலும் எத்தனை திரிகள் வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் நெல்லை பகுதியில் பயன்படுத்தப்படும் வாழைப்பூ விளக்கில் திரி போடுவதற்கென தனியாக மூக்கு என்ற அமைப்பு உண்டு.


பொதுவாக குத்துவிளக்குகளில் ஒற்றை மூக்கு, நாலு மூக்கு, ஐந்து மூக்கு என்று பல வகைகள் உண்டு. நெல்லைப்பகுதியில் பயன்படுத்தப்படும் வாழைப்பூ விளக்கு ஒற்றை மூக்கு கொண்டதாகவே இருக்கும். பொதுவில் வீடுகளில் ஒரு மூக்கு விளக்கினையே பயன்படுத்துவது மரபு. ஒன்றுக்கு மேற்பட்டு திரி போடும் வசதியுள்ள விளக்குகளை கோயில்களில் பயன்படுத்துவதே பெரு வழக்காக இருக்கிறது. குத்து விளக்கு தெய்வீகமானது, தெய்வ அம்சம் பொருந்தியது, மங்களத்தைக் குறிக்கும் தத்துவம் என்பதான கருத்துகளும் தமிழர் மரபில் உண்டு. விளக்கின் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் விளக்கப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள் என்பதாக விளக்கப்படுவதுடன் இவை அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பதாகும் என்று கொள்ளப்படுகிறது. குத்துவிளக்கை நன்கு துலக்கி, குங்குமமிட்டு, பூ போட்டு அலங்காரம் செய்யவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம். விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது பற்றிய விளக்களையும் முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த திக்கு நோக்கி விளக்கின் திரி இருக்க வேண்டும் அதன் பலன் என்ன என்பது பற்றியும் விளக்கம் உண்டு. குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்; திரண்ட செல்வம் உண்டு. தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அப சகுனம்; பெரும் பாவம் உண்டாகும். அது போல் எத்தனை முகம் அல்லது திரி ஏற்ற வேண்டும்என்பது பற்றியும் அதனால் உண்டாகும் பலன்களும் சொல்லப்பட்டிருக்கிறன. குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன். இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை. மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி. நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும். தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத் தண்டு நூலில் திரி போட்டால் குல தெய்வ
குற்றமும், சாபமும் போகும். புது மஞ்சள் சேலைத் துண்டில் திரி போட தாம்பத்ய தகராறு நீங்கும். புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வரும். நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி. விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும். நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த பலன் இல்லை, மத்திம பலனே. கடலை எண்ணையோ இதர தரம் குறைந்த சமையல் எண்ணைகளையோ விளக்கில் உபயோகிப்பது மூதேவி ஆராதனையாகக் கருதப்படுவதால், அவற்றை நீக்குவது நன்மை தரும். இவ்வாறெல்லாம் விளக்குப் பற்றிய நம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வருகின்றன. 


                                                                  

Monday, 14 October 2013





 மைகூடும் 
                இறகு தூவலும்


மனிதனை பேசத் தெரிந்த மிருகம் என்று சொல்வது உண்டு. பேச்சு என்பது வாயின் மூலம் சத்தம் எழுப்புவது ஆகும். மனிதர்கள் இப்படி ஒலி எழுப்பி அதாவது சத்தத்தை உண்டாக்கி ஒருவருக்கொருவர் தகவல்களை, கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர். இந்த ஒலி எழுப்புதல் சில இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரைமுறை படுத்தும் போது அது மொழியாக பரிணமிக்கிறது. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மொழிகள் புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மொழி என்பது நிலப்பரப்பு, இனம், குழு, என்ற பல்வேறு விதங்களில் மாறுபட்டு தனிதனி மொழியாக உருபெற்றதாகவும் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த பேச்சு மொழி எழுத்து மொழியாக பரிணாமம் பெறும் பொழுது எழுத்து என்கிற குறியீடுகள் உருவாயின. எழுத்து, மொழிக்கு மொழி வேறுபடும். எழுத்து கல், மண், செப்பு, ஓலை, புல், தாள் என்று பலவகை ஊடகங்களில் எழுதப்பட்டது. காகிதம் என்கிற தாளில் மையை தொட்டு எழுதும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இன்று நாம் தாளில் எழுதுவதற்கு எளிதாக கையாளும் விதத்தில் இருக்கிற வகை வகையான பேனாக்களை பயன்படுத்துகிறோம். ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் இந்த பேனாவோடு மல்லாடி வந்தது பெரிய சோகக்கதை. அன்றைய மாணவர்கள் எழுதும் பேனாவோடும் மைக்கூடோடும் ஒரு கடின வாழ்க்கை வாழ்ந்தனர் என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் எழுதுவதற்கு இறகு பேனா என்கிற நிப் பேனாவை தான்  பயன்படுத்தி வந்தனர். பாதி தடிமனாகவும் பாதி ஒல்லியாகவும் இருக்கும் ஒரு சாண் நீளம் கொண்ட உருண்டை மரக்கட்டையில் நிப்பை செறுக வேண்டும். நிப்பை செறுகுவதற்கு தோதுவாக பேனா கட்டையின் பருத்த முனையில் இருக்கும் உலோக ஸ்பிரிங் அமைப்பைக் கொண்ட குடைவான உட்பகுதியில் நிப்பை அழுத்தி செறுகினால் இறுகப் பிடித்துக் கொள்ளும். மை கூடில் இருக்கும்  மையில் பேனாகட்டை நிப்பை தோய்த்துத் தோய்த்து தான் எழுதவேண்டும். இந்த மையை மாணவர்களளே தயாரித்து கொள்வார்கள். காலணாவுக்கு மைபொடி பொட்டலம் பெட்டிக் கடையில் கிடைக்கும். இதை வாங்கி மைகூடில் கொட்டி தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கலக்கினால் எழுதுவதற்கான மை தயார். நிப்பை மையில் தொட்டு தொடர்ந்து எழுத முடியாது. ஒருமுறை தொட்டு எழுதினால் ஐந்து ஆறு எழுத்துகள் தான் எழுத முடியும். இந்த நிலை மாணவர்களுக்கு கொஞ்சம் சிரமமான ஒன்றாகவே இருந்தது. மேலும்

மைக்கூடு என்பது கண்ணாடி அல்லது பீங்கானால் செய்யப்பட்டிருக்கும். கவனகுறைவால் தவறி கிழே விழுந்தால் நொறுங்கி உடைந்து மையெல்லாம் கொட்டிப்போகும் சாத்தியமும் அதிகம்.  இருந்தது கூடுதல் கஸ்டம். எனவே எப்போதும் மைக்கூடை கவனமாக வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.  வகுப்பறையில் மைகூடை சாய்வுமேசை (desk) மீது தான் வைக்க வேண்டும். அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். விட்டால் மேசை அசையும்போது அது தரையில் விழுந்து உடைய வாய்ப்பு உண்டு. (நான் படித்த திருநெல்வேலி இந்து கல்லூரி பள்ளியில் அசம்பாவிதத்தை தவிர்க்க ஒர் உபாயம் கையாளப்பட்டு வந்தது. சாய்வுமேசையின் சமதள பட்டியில் மைகூடு வைப்பதற்கென்று வட்டவடிவில் ஒரு குழியும் பேனாகட்டை வைப்பதற்கென்று ஒரு சாண் நீளத்தில் ஒரு பள்ளமும் தோண்டப்பட்டிருக்கும் அவற்றில் மைகூடையும் பேனாவையும் பாதுகாப்பாய் வைத்துக்கொள்ள முடியும். அறிவியல் வளர்ச்சியின் விளைவாய் அன்றிருந்த இந்த சிரமங்கள் ஏதும் இன்றி சொகுசாய் பலவகை பேனாக்களை இன்று பயன்படுத்தி வரும் நமக்கு மைகூடோடு அல்லாடிய அன்றைய மாணவர்களை நினைத்தால் கொஞ்சம் அனுதாபம் ஏற்பட தானே செய்கிறது.














Tuesday, 8 October 2013

கம்மாலை 
என்னும்
கமலை
 வே வேட்டைச்சமூகத்திலிருந்து வேளாண் சமுதாயமாக மாறியது மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக கொள்ளப்படுகிறது என்கின்றனர் மானுடவியளாலர்கள். வேளாண்மைக்கு அடிப்படை நீர்பாசனம். தொடக்க காலங்களில் நீர்ப்பாசனத்திற்கு ஆறு, பொய்கை போன்ற இயற்கை நீர்நிலைகளையே சார்ந்திருந்த நிலையே இருந்தது. . பின்னர் பாசன முறைகளைப் பல வகையாக மாற்றிக் கொண்டனர். இயற்கை நீர் நிலைகள் இல்லாத இடங்களிலும் பாசன வசதிக்காக ஏரி, குளம், குட்டை, கண்மாய், பள்ளம், கிணறு போன்றவற்றால். பாசனத்திற்குரிய சூழலை உருவாக்கிக் கொண்டனர். இந்த இருவகையான நீர் ஆதாரங்களும் வான்மழையை நம்பியே இருக்கின்றன. சீரான மழை பொழிவிற்கு காடுகளின் பங்கு குறித்த அறிவு நம் முன்னோருக்கு தெளிவாய் இருந்ததன் காரணமாக காடுகளை உருவாக்குவதிலும் பேணுவதிலும் அதிகம் அக்கறை கொண்டிருந்தனர். இதனால் நிலப்பரப்பில் முக்காற் பங்கிற்கு மேலும் மரங்களடர்ந்த காடாயிருந்தமையால் கோடைமழை, காலமழை, அடைமழை, படைமழை ஆகிய நால்வகை மழையும் பொய்க்காமல் பெய்து வந்தன. வம்ப மழை என்கிற அகால மழையும் அவ்வப்போது பெய்தது. இவ்வாறான நிலையினால் நீராதரங்கள் செழுமையாய் இருந்தன. வரத்துநீர் இல்லாத இடங்களில் நிலத்தடியில் நீர் சுரக்குமிடங்களை கண்டறிந்து கிணறுகளை வெட்டிக்கொண்டனர். நிலத்தடி நீரை கண்டறிவது பற்றிய அறிவை -ஞானத்தை- கூவநூல் என்கிற பழந்தமிழ் நூல் பதிவு செய்திருக்கிறது. 

 கிணற்று நீரை வயலுக்கு இறைக்க கம்மாலை போன்ற பொறிகளை கண்டடைந்தனர். அம் என்றால் நீர் என்றொரு பொருள் உண்டு. அம்-கம்=நீர். ஆலுதல்=ஆடுதல், சுற்றுதல். ஆல்-ஆலை=சுற்றிவரும் பொறி. செக்காலை, கரும்பாலை என்றாவது போல் சுற்றி சுழன்று நீர் இறைக்கும் பொறி கம்மாலை ஆனது. இந்தக் கம்மாலை-கமலை-கவலை என்றவாறு திரிந்து இன்று வழக்கில் உள்ளது. மாடுகள் பூட்டி இந்தக் கம்மாலை பொறி இயக்கப்பட்ட்து. அறிவியல் வளர்ச்சியில் இன்று பல வகையான் நீரேற்றிகள் புழக்கத்தில் வந்து விட்டதால் கம்மாலை என்கிற கமலை வழக்கொழிந்து கொண்டிருக்கிறது.















Monday, 30 September 2013







 பால் கஞ்சி






உயிர் வாழ்தலுக்கு அத்தியாவசிய்மானவற்றில் உணவுக்கு முக்கிய இடமுண்டு. வாழ்தல் என்பது உடல்நலத்துடன் வாழ்வது என்பதான புரிதல் ஆகும். அதற்கு ஆரோக்கிய உணவை தேர்ந்தெடுத்தல் அவசியம்.  நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பல சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ப, நமக்குத் தேவையான சத்துள்ள உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நமது உடல் நலத்தை பேணும் விதத்தில் உண்ணும் முறைகள் சிலவற்றை பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். அளவோடு உண்ணுதல், நேரத்தில் உண்ணுதல் போன்றன அவற்றில் சில. அதுபோல் பால் கஞ்சினை அவ்வப்போது குடிப்பதும் ஒரு முறை. இநத பால்கஞ்சி உடல் நலத்திற்கு பெரிதும் துணை செய்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற 5 மற்றும் 7 ஆம் மாதங்களில் பால் கஞ்சி குடிப்பது என்பது கர்ப்பிணி பெண் மற்றும் கருவில் வளரும் சிசுவின் உடல் ஆரோக்கியத்திற்கும் சிக்கலற்ற சுக பிரசவத்திற்கும் பெரிது உதவுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு பால் கஞ்சி கொடுப்ப்ப்பது ‘கஞ்சி வைத்துக் கொடுத்தல் என்ற பெயரில் ஒரு சடங்காகவே நட்த்தும் பழக்கம் சில பகுதியில் இன்றும் இருந்து வருகிறது. அந்த வகையில் பால் கஞ்சி என்பதை தமிழர் பண்பாட்டோடு கலந்து விட்ட ஒன்று என்று கூட சொல்ல்லாம்.
பால்கஞ்சி வைக்கும் முறை:
ஒரு மடங்கு புழுங்கல் அரிசிக்கு இரு மடங்கு பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் சாரணவேர், 10 பூண்டுபல், ஒரு கைபிடி அளவு முருங்கை பூ, இரண்டு மூன்று அச்சுவெல்லக் கட்டி போன்றனவும் தேவை. பாலில் அரிசியை நன்றாக குழைய வேக விட வேண்டும். கூடவே பூண்டு பற்களையும் வேக விட வேண்டும்.
சுக்கையும் சாரணவேரையும் தண்ணீர் விட்டு மையாக அரைத்து கஞ்சி பாதி வெந்து கொண்டிருக்கும் போது அதில் ஊற்றி நன்றாக கலக்கி விட வேண்டும். எடுத்து வைத்திருக்கும் கைபிடி அளவு முருங்கை பூவையும் கஞ்சியில் போடவும். அரிசி நன்றாக குழைந்து வெந்த பின் இறக்கவும். கர்ப்பிணி பெண் பால்கஞ்சி குடிக்கும் அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு தான் கஞ்சி குடிக்க வேண்டும். கஞ்சி குடிக்கும் போது சுவைக்குஅச்சு வெல்லத்தைக் கடித்து கொள்ளலாம். கஞ்சி குடித்த பின் இரண்டு மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்க்க் கூடாது. பின் புளியில்லா கறி வைத்து மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும்  என்பது சொல்லப்பட்டிருக்கிற நடை முறை. ஆரோக்கியமான வாழ்வுக்கு இப்படி எத்தனை வழிமுறைகளை சொல்லி வைத்திருக்கின்றனர் நமது பெரியவர்கள். இந்த எளீய, சிறந்த வழி முறைகளை உதாசீனபடுத்துகிற மன நிலையில் தான் இன்று நம்மில் பெரும்பாலோர் இருக்கிறோம்.

Sunday, 22 September 2013



பா

பாசன அமைப்புகளின் 
                  பரிதாப நிலை....

உழுதுண்டு வாழ்வதற்கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்குஎன்கிற அடிப்படை உணர்வில் மகிழ்பவர் தமிழ் மக்கள். இவர்கள் தான் நீர்பாசனம் என்பதன் மூலவரும் கூட. கடந்த 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாசனப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் வெளிப்பாடு தான் தமிழ்நாட்டில் காணப்படுகிற ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள். தமிழகம் மழை மறைவு பிரதேசத்தில் இருப்பதால் தொடர்ச்சியான மழை இருப்பதில்லை. மேலும் .  தமிழகத்தின் புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான நிலபரப்பு பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம். இருந்தாலும் பெய்யும்போது மழைநீரை தேக்கி ஆண்டு முழுவதும் பயிர் செய்வது இன்றியமையாதது ஆகிவிட்ட்தால் பாசனப் புலமையில் இயற்கையாகவே தமிழர்கள் சிறந்து விளங்கினர். தமிழ் நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன் 39000 ஏரிகள், குளங்கள் இருந்தன என்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 



தமிழ்நாட்டின் பல ஏரிகள் அரிய வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை. ஏரிகளில் மன்னர்கள் அமைத்த மதகுகளில் செய்திகளை எழுதி வைத்துள்ளனர். இதனால் அது கட்டப்பட்ட ஆண்டினைத் துல்லியமாக அறிய முடிகிறது. ஈரெட்டிமலை ஏரி, ஆமந்தூர் ஏரி, குணமிலி ஏரி, நல்லி ஏரி, ஓங்கூர் ஏரி, வீராணாம் ஏரி போன்றன சில பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஏரிகளாகும். இந்த ஏரிகளை பராமரிக்க ஏரிவாரியம் என்ற அமைப்பு இருந்ததை உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் நாம் அறிய முடிகிறது. ஏரிகள் அமைப்பதில் சில தொழில் நுட்பங்களை நமது முன்னோர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர். ஏரியின் அமைப்பு எட்டாம் பிறை வடிவில் அமைந்திருக்கும். கோடி அல்லது கலிங்கல் என்கிற மறுகால் பாறையின் மீது அமைக்கப்பட்டன. தண்ணீரை விசைகுறைத்துக் கீழே இறக்க பாறைகள் உதவின. செங்கல் கட்டுமானத்தில் கருங்கல் போர்த்துக்கல் ஆணி செருகும் வகையில் பல அணைகட்டுகளும் கலிங்கல்களும் காணப்படுகின்றன. பெரிய கற்களை அடுக்கி இடையில் சுண்ணாம்பு-செங்கல் சல்லி போட்டு நிரப்பும் வகையில் சில உள்ளன. இந்த செங்கல் சுண்ணாம்பு கட்டுமானகளில் பல, பாறை போலக் கட்டியாக இருக்கின்றன. மடை, மதகு, தூம்பு, குமுழி, நாழிகைவாய் என்று அழைக்கப்படுகிற நீர்வழி மிகவும் கெட்டியாக அமைக்கப்பட்டன. 



இப்படி வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாட்டுக் குளங்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் சீர்குலைவு, ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஆக்ரமிப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு முறை, குளங்களின் கட்டுமான அம்சங்கள்,  நீர் பிடி பகுதியின் வனப்பரப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பயன்பாட்டு முறையில் உண்டான மாற்றங்கள்,  மற்றும் நகர்மயமாதல் உள்ளிட்டவற்றால் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறன. கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில்  32202 குளங்கள் இருந்தன. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 15 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்ததோடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் குளங்கள் அனைத்தும் காணாமல்போய்விடும் அபாய்ம் இருக்கிறது. ஏரி, குளங்களின் மறைவு நிலத்தடி நீர் மட்ட்த்தின் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையின் தீவிரத்தை மனதில் கொண்டு அரசுகள் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்குமா?