Sunday, 7 October 2012



  சீனிமிட்டாய்
                 என்ற
            வீதிமிட்டாய்        
                                     என்ற
                     சுத்துமிட்டாய்.



       


          திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரிய சிறப்பு இனிப்பு பலகாரம் இது. வீதி மிட்டாய், தேங்காய் எண்ணெய் மிட்டாய், சுத்து மிட்டாய், சீனிமிட்டாய்என்றெல்லாம் இதைக்குறிப்பிடுவர். ஆரம்ப கட்டத்தில் திருவிழாக் காலங்களில் வீதிகளில் முளைக்கும் திடீர் மிட்டாய் கடைகளில் விற்பனை செய்யப்பட்டதால் இது வீதிமிட்டாசி ஆனது.
கருப்பட்டியில் செய்த இந்த மிட்டாய் துண்டை இரண்டாக உடைத்தால் நடுவில் குழல் போன்ற பகுதியிலிருந்து கருப்பட்டிப்பாகு தேன் போல ஒழுகும். அதனால் தேன் ஒழுகும் மிட்டாய் என்று குறிப்பிடப்பட்ட இது காலப்போக்கில் தேங்காய் எண்ணெய்மிட்டாசி என்று திரிந்து போனது. சுட்டு தட்டில் வட்டமாய்  சுற்றி அடுக்கப்படுவதால் இது சுத்துமிட்டாசி ஆனது. சீனிபாகுவில் தோய்ப்பதால் சீனிமிட்டாசி. இந்த பழமையான இனிப்பு, முன்னர் கருப்பட்டியில் தயார் செய்யப்பட்டது 
                      ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகம் இருந்தன. அதனால் இந்த பகுதியில் பனைபடு பொருளான கருப்பட்டியின் பயன்பாடு அதிகம். காலப்போக்கில் பனைமரங்கள் குறைந்து போயின. கூடவே கருப்பட்டி உற்பத்தியும்தான். உற்பத்தியில்லாமல் அதன் விலை உயர்ந்தது. எனவே இப்போது கருப்பட்டிக்குப் பதில் சர்க்கரை. அதாவது சீனிதான் பயன்படுத்தப்படுகிறது.. மற்றபடி செய் முறை, சேர்மானங்கள் மாறவில்லை. பண்டிகை காலங்களில் வீடுகளில் செய்து சுவைக்கப்பட்ட இந்த இனிப்பு காலப்போக்கில் கடைகளில் விற்பனைக்கு வந்தது.
செய்யும் முறை:
தோல் அகற்றிய உளுந்தை  அதாவது குத்துப்பருப்பை திருகையில் வைத்து திரித்து மாவாக்க வேண்டும். மாவில் புளிப்புத் தன்மை ஏற்ற முதல் நாள் இரவு, 100 கிராம் உளுந்து மாவை கெட்டியாகப் பிசைந்து வைக்க வேண்டும். மறுநாள் புளிக்க வைத்த மாவோடு கூடுதலாக 100கிராம் உளுந்து மாவு சேர்த்து, அதோடு 1 கிலோ பச்சரிசி மாவைக் கொட்டி, தோசை மாவு பதத்தைவிட சற்று மேலான குழைவில் அடித்துப் பிசைய வேண்டும். இந்தக் கலவை 4 மணி நேரம் புளிக்க வேண்டும்.   

அடியில் காலணா அளவுக்கு சிறிய ஓட்டை போட்ட பித்தளை அல்லது வெண்கலச் சொம்பு தான் இந்த மிட்டாசியை வார்க்கும் வார்ப்புக்கருவி      சுத்து மிட்டாய்            வார்க்க, 2 அடுப்பும், 4 ஆட்களும் தேவை. ஒரு  அடுப்பில் கடலை எண்ணெய் . இன்னொரு அடுப்பில் பதமான சர்க்கரைப் பாகு.   எண்ணெய் சூடேறிய பின்  வார்ப்பு சொம்பில் மாவை ஊற்றி எண்ணெய்  சட்டியில் பூ வடிவத்தில் சுற்ற வேண்டும்.. சட்டியின் விளிம்பை ஒட்டியே சுற்றினால் தான் வட்டமாக அடுக்கி அழகு செய்ய முடியும் . மேலும்,சுற்று பொடிச்சுற்றாக இருக்க வேண்டும்..  .  
                    வெந்து  வெண்மை மாறா நிலையில் அள்ளி, அதே சூட்டோடு அருகில் கொதிக்கும் சர்க்கரைப் பாகில் போட வேண்டும். இரண்டு நிமிட பாகுக் குளியலுக்கு பின்  அதே வேகத்தில் அள்ளி, தட்டில் வட்டவடிவமாக அடுக்கி, மேல் புறத்தில் பெயிண்ட் அடிக்கிற பிரஷால் பாகைத்தொட்டு பூசவேண்டும்.  இது தான் அடுக்கும் தொழில்நுட்பம். இப்போது தயாராகிவிட்டது தேன் ஒழுகும் வீதி மிட்டாசி. சுவைத்துப் பார்த்தவர்களால் அதன் சுவையை ஒரு போதும் மறக்கவே முடியாது 



.